search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பி உதயகுமார்"

    • கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
    • 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45 ஆயிரம் ஏக்கர், மேலூர் ஒருபோக பாசனத்திற்கான 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர்திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய ௩ பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்திட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 கண்மாய்கள், 110 கிராமங்கள் மற்றும் 5 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. விவசாயம், குடிநீர், கால்நடை தேவைக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    தற்போது போராட்டம் நடத்தி வருகிற பாசன விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் மதுரை மாவட்ட கலெக்டர் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.

    மதுரை:

    தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) காலை மதுரை வருகிறார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பாக வலையங்குளம் டோல்கேட் அருகே சீருடை அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. இதன் முன்னேற்பாடாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசியமும், தெய்வகமும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் குரு பூஜையை முன்னிட்டு, வீர அஞ்சலி செலுத்த எடப்பாடி யார் வருகிறார். எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது தேவர் குரு பூஜை விழாவின் போது எதிர்க்கட்சிகள், சமய தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அதேபோல் தற்போதும் பாதுகாப்பான ஏற்பாடுகளை முதலமைச்சர் செய்வார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என எடப்பாடியார் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட சி.சி.டி.வி. காட்சியில் அந்த நபர் பெட்ரோல் குண்டை பொருத்தி அதை வீசும் காட்சி வெளியிடப்பட்டது.

    இப்படி சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டாகும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை எடப்பாடியாருக்கு மக்கள் வழங்குவார்கள். அரசியல் கிங் மேக்கராக எடப்பாடியார் விளங்குவார். கால சக்கரம் சூழல்கிறது, அதற்கு ஏற்றாற்போல் எடப்பாடியாருக்கு என்ன பதவி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் மூலம் இந்திய ஆளுமைகளின் கிங் மேக்கராக எடப்பாடியார் திகழ்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஒரு மாநாடு எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அமையும். இந்த மாநாட்டில் இளைஞரணியினர் உள்பட மூத்த முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இளைஞரணி மாநாட்டை வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதுரைக்கு நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரிடம் நீங்கள் நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பான ரகசியம் என்ன? என்று கேளுங்கள் என கூறியுள்ளார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கோரி ஒரு செங்கலை மட்டும் வைத்து சென்றீர்கள். அந்த செங்கலையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் ரகசியத்தை சொல்லுங்கள்.

    நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி. சனாதனம் குறித்த எனது பேச்சை பா.ஜ.க.வினர் திரித்து பரப்பினர். சனாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துக்களை அ.தி.மு.க.வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்கவில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அழைக்கவில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு. நேற்று கூட புதிய பாராளுமன்ற விழாவில் குடியரசு தலைவரை அழைக்கவில்லை. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

    ராமநாதபுரம்:

    தியாகி இமானுவேல் சேகரனார் 66-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி இந்தாண்டு அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் இந்திய ராணுவத்தில் இணைத்துக்கொண்டு சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பியவர்.

    இமானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது தி.மு.க. அரசு அரசு விழாவாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தி.மு.க.வால் சொல்ல மட்டுமே முடியும். அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
    • இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 35 ஏக்கரில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் நாள்தோறும் எடப்பாடியாரின் தகுந்த வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெயிலில் வாடக்கூடாது என்று எடப்பாடியார் ஆணையின் படி கூடுதலாக வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் சதுரடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட 40 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாகவும்,

    சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும்,

    தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங்ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அதிசயம் ஏழாக இருந்தாலும் எடப்பாடியார் உரையாற்றும் போது, இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும்.

    பாராளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்சத் தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து, அவருக்கு நடந்த கொடுமையை, அவமானத்தை எடுத்துரைத்தார்.

    புரட்சித்தலைவி அம்மா அப்போது நான் மீண்டும் சட்டசபைக்கு முதலமைச்சராக வருவேன் என்று சபதம் போட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். பெண்கள் மீது பாசம் உள்ளது போல தி.மு.க. நாடகம் போடுகிறது. அம்மாவின் தைரியத்தை டெல்லியில் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார்.

    எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் மனுவில் கூறியிருந்தார்.
    • மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.

    எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது.
    • தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    ராமேஸ்வரம்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

    விழாவில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, வாழும் இரும்பு மனிதராக உள்துறை மந்திரி அமித் ஷா திகழ்வதாகவும், தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்திருப்பதாகவும் கூறினார்.

    நாட்டில் ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும். மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக 9 ஆண்டு கால சாதனைகளை கரும்பு மனிதர் அண்ணாமலை, வீடு வீடாக வீதி வீதியாக எடுத்துச் சொல்ல இருக்கிறார்.

    அதேசமயம், இந்த ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆபத்தாக இருக்கிறது தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத திமுக ஆட்சி. அரசியல் அதிகாரம் என்பது கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் நிரந்தர சொத்தாக வந்துவிடக்கூடாது. அதை தடுத்து நிறுத்துவதறகு, பிரதமர் மோடியின் தூதுவராக இங்கு உள்துறை மந்திரி அமித் ஷா வந்திருக்கிறார்.

    இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    • பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
    • மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் வீதியில் இன்று காலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் செய்தார். அப்போது மேளம் அடித்து வாக்கு சேகரித்தார். அவர் மேளம் அடிக்க திடீரென ஒரு பெண் நடனம் ஆடினார்.

    தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனதால் வாக்காளர்களை கவர களப்பணி ஆற்றி வருகிறோம். ஆளும் கட்சி 33 அமைச்சர்களும் முகாமிட்டு பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். மனமா, பணமா என்றால் மனமே இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என்ற மன உறுதி கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் இருக்கிறது.

    மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைவதற்கு அச்சாரமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி இருக்கும்.

    இரண்டு ஆண்டு கால தி.மு.க. மக்கள் விரோத அரசின் வேதனைகளை மூடி மறைக்க பணத்தை அவர்கள் வாரி இறைத்து கொண்டிருக்கிறார்கள். ஆடு, மாடுகளை போல் மக்களை பட்டியில் அடைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதிகாரம் எல்லை மீறி செல்கிறது. அதிகாரிகள் வேண்டுமானால் அதிகாரத்திற்கு பயந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம்.

    ஆனால் மக்கள் இதனை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தேர்தலில் நியாயத்தின் பக்கம், ஜனநாயகத்தின் பக்கம் நின்று சாமானிய தொண்டனான தென்னரசுக்கு வாக்களிப்பார்கள். அமைச்சர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    தேர்தல் களத்தை விட்டு ஓடுவதற்கு அச்சாரமாக மின்சாரத்துறை அமைச்சர் ஓடுகிறார். நாளை தேர்தல் களத்தில் எல்லோரும் ஓடுகின்ற காட்சி விரைவில் வரும். பட்டப்பகலில் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சத்தை போக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை.
    • நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து செல்லும்போது தமிழகத்தில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ.1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடி பழனிசாமி மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4200 கோடி நிதி செலவிடப்பட்டது. 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் ரூ.500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது ரூ.ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூ.1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் எடப்பாடி 1 லட்சம் பேருக்கு திருமணத்திற்காக தங்க காசுகளை வழங்கினார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருமண உதவித்தொகை திட்டம் தாலிக்கு தங்கம் கொண்டு வந்ததே பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான். பிளஸ்-2 வரை படித்தால் ரூ.25000, பட்டம் பயின்றால் ரூ.50,000 என்று அறிவித்தார். தங்கத்தையே பார்க்காத பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

    ஆனால் அதையும் தி.மு.க. ஆட்சி நிறுத்திவிட்டது. இன்று ஏதோ உயர்கல்வி பயில ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு, லேப்டாப், 2000 மினி கிளினிக்குகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன .

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை. நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். திட்டங்கள் வரும் ஆனால் வராது என்ற நிலையில் தான் வாக்குறுதிகள் உள்ளன.

    ஆனால் ஜெயலலலிதா கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முடக்கப்பட இருந்த இரட்டை இலையை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் இன்று மாலை ஈரோட்டில் நடக்கும் வேட்பாளர் அறிமுக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியவர்கள் தரவில்லை.
    • எனக்கு கட்சியா எனது இல்ல திருமண விழாவா என்று கேட்டால் முதலில் கட்சி தான் எனக்கு என் உயிரோடு கலந்தது என்பேன்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வார்டு எண் 38-ல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எனும் ஆலமரத்தின் மகத்தான இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நம் அனைவரும் அணிவகுத்து நிற்கின்றோம். ஈரோடு மண்ணின் மக்களின் மகிழ்ச்சியில் இன்று தெரிகிறது. நம் பெரிய வெற்றியை காண இருக்கிறோம்.

    இன்று நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் இரட்டை இலை சின்னத்தை தேடி வர ஆரம்பித்து உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தி.மு.க. சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றவே இல்லை.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியவர்கள் தரவில்லை. அமைச்சர்கள் செல்லும் இடங்களில் பெண்களே நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினீர்களே ஆயிரம் ரூபாய் இதுவரை தரவே இல்லை என்று நேரடியாக வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட்டை இழப்பார். நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் முகம் மலர்ச்சியுடன் நம்மை வரவேற்று உபசரிப்பதை பார்த்தால் இதுவே நாம் கண்டுள்ள வெற்றியின் முதல் படி . எனது மூத்த மகள் திருமண விழா பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

    ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு கழகத்திற்காக நான் இன்று ஈரோட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளேன். எனக்கு கட்சியா எனது இல்ல திருமண விழாவா என்று கேட்டால் முதலில் கட்சி தான் எனக்கு என் உயிரோடு கலந்தது என்பேன்.

    அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்று வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் எடப்பாடி பழனிசாமி கரங்களை வலு சேர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர்.
    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிப்ரவரி 23-ந்தேதி 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். தச்சநல்லூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனைகூட்டம் நடத்தி உள்ளார். ஆனால் 1 ஆண்டுகளுக்கு முன்பே போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு இடதுசாரிகள் அமைப்புகள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. அவர்கள் மவுனம் சாதித்து வருகிறார்கள். தி.மு.க.வை எதிர்த்து கேள்வி கேட்க எந்த கட்சிகளும் தயங்கி வருகிறது. அ.தி.மு.க. மட்டுமே தி.மு.க.வை எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பி போராட்டங்கள் நடத்தி வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி முடியும் நேரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் கடந்த 19 தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

    தற்போது 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் விண்ணை முட்டும் வகையில் கடன் தொகை உயர்ந்துள்ளது. நிதி அமைச்சர் ஒரு பாதையில் செல்கிறார். அவரிடம் முதல்-அமைச்சர் எந்த கேள்வியும் கேட்க முடியாத நிலை உள்ளது.

    19 மாத தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள், மானிய கோரிக்கையின் போது அளித்த தகவல்கள், 110-ன் விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

    எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் உரிமைக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பினாலும், அமைச்சர்கள் தகுந்த பதிலை கூறுவதில்லை. இதனால் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு தொடர்பாக மக்கள் மன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

    தற்போது பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும்120 விருதுகள் வாங்கப்பட்டது.

    விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இதுதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் குறித்த தீர்ப்பு இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. நானும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், ஜெயலலிதா பேரவை மாநில இணைசெயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரியபெருமாள், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆவரை பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, ஜெனி, மோகன், சண்முககுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், நிர்வாகிகள் வக்கீல் அங்கு அங்கப்பன், பாறையடி மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது.
    • அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இல்லம் தேடி கல்வி திட்டங்கள் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. பெரிய அளவில் பலன் தரவில்லை என்று என்.சி.இ.ஆர்.டி. நடத்திய ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அடிப்படை கல்வியை வலுப்படுத்தி மாற்று திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

    தமிழகத்தில் 20 சதவீத மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படை கணக்குகளை 23 சதவீதம் பேர்களால் தான் செய்ய முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் தேதி, மாதத்தை கூட சரியாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை உள்ளது.

    அதிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கி உள்ளது. அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 40-ல் இருந்து 45 சதவீதம் வரை மாணவர்கள் தாய் மொழியை நன்கு படிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது. இதன் மூலம் தமிழகத்திலே கல்வி கற்றலில் பின்தங்கி இருப்பது வேதனையின் வேதனையாகும்.

    கொரோனா தாக்கம் இருப்பதாக நாம் வைத்துக் கொண்டாலும் கூட, இந்த 2 ஆண்டுகளாக இன்னும் பள்ளிக்கு முழுமையாக மாணவர்களை வரவழைத்து, அவர்களுக்கு கல்வி பயில்வதற்கு இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், தோல்வியிலே முடிந்திருப்பதே ஆய்வின் மூலம் தெரிகிறது.

    ஆகவே பிரிட்ஜ் கோர்ஸ் என்ற இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் தமிழக அரசால் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. எனினும் தமிழக மாணவர்களின் அடிப்படை கற்றல் பின்தங்கி இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×